சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் சாரணர் இயக்க மாணவர்கள் உருவாக்கிய சுற்றுச்சூழல் மாசு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன.
இந்தக் கண்காட்சியை கூடுதல் கோட்ட மேலாளர் இளங்கோவன் தொடங்கிவைத்தார். இதில், சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன் கூறியதாவது, உலகம் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் நமக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அவசியமான ஒன்றாக உள்ளது.
ரயில்வே துறையில் சுற்றுச்சூழல் தொடர்பாக தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுவருகிறது. தெற்கு ரயில்வே சார்பாக 19 ரயில் நிலையங்களில் எக்கோ ஸ்மார்ட் ஸ்டேஷன் தொடங்க உள்ளோம்.
முதல் ஸ்டேஷனாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை தேர்வு செய்ய உள்ளது. இதன் மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காத பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.