அரசுப் பேருந்து வழித்தடத்தை தனியார் பேருந்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது, அரசே நிதி உதவி செய்து பேருந்துகளை இயக்க வேண்டும், மின்சாரப் பேருந்து என்று பேருந்துகளை தனியார்மயமாக்கக் கூடாது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அரசுப் பேருந்து சங்கங்களின் சார்பாக சென்னை பல்லவன் இல்லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் அதிகமான அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் பங்கேற்றனர்.
இது குறித்து தொமுச பொதுச்செயலாளர் நடராஜன் பேசுகையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் 525 பேட்டரி பேருந்துகளை இயக்க அனுமதி அளித்துள்ளது. இந்தப் பேருந்துகளை இயக்குவது உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளும் தனியாரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு தொடர்ந்து போக்குவரத்துக் கழகத்தை தனியார்மயமாக்க முயற்சி செய்துவருகிறது.
எனவே, அரசு உடனடியாக தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். முதல் கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டம் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம். அரசு இதை செய்யவில்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
மேலும், பேட்டரி பேருந்துகள் கொள்முதல் விலை மற்றும் பராமரிப்பு போன்றவை தற்போதைய பேருந்துகளை விட அதிகம். எனவே இந்தப் பேருந்து கட்டணமும் அதிகமாக இருக்கும் என்று அவர் கூறினார்.