சென்னை புத்தகக் கண்காட்சியில் விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணதுரை, டில்லி பாபு இணைந்து எழுதிய 'விண்ணும் மண்ணும்' புத்தகம் வெளியிடப்பட்டது. அதை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை வெளியிட்டார். இதையடுத்து, விஞ்ஞானி டில்லி பாபு எழுதிய 'அடுத்த கலாம்' புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேசுகையில், "திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பார்கள்.
ஆனால் இனிவரும் காலத்தில் விண்ணில் சென்று திரவியம் தேட வேண்டும். யுரேனியத்தைவிட பன்மடங்கு சக்திவாய்ந்த ஹீலியம்- 3 நிலவில் நிறைய உள்ளது. வருங்காலத்தில் ஏற்படும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய இதனை பூமிக்கு கொண்டுவந்து மின்சாரம் தயாரிக்க வேண்டும். இதற்காக நிலவில் ஒரு தொழிற்சாலை அமைக்க வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில் இது நடைபெறும்" என்றார்.
இதைத் தொடர்ந்து விஞ்ஞானி டில்லி பாபு பேசுகையில், "மயில்சாமி அண்ணாதுரையின் தமிழ், தமிழ் பேராசிரியர்களை மிஞ்சும் அளவுக்கு உள்ளது. தொழில் சார்ந்த தமிழை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் செல்ல வேண்டும். காட்சி இலக்கியம் அடுத்து வரும் நாட்களில் பிரபலமடையும். காகித இலக்கியமாக படைப்பதை விட்டுவிட்டு விர்சுவல் ரியாலிட்டி, ஆகுமெண்ட் ரியாலிட்டியை கொண்டுவர வேண்டும்" என்றார்.
அதன்பின் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், "மீனவர்கள் எல்லை தாண்டி செல்வது எல்லையை தவறவிட்டதால் அல்ல,
நமது எல்லைக்குள் அவனுக்கு தேவையானது இல்லை என்பதால்.
நாம் அவனிடம் எல்லை தாண்டிவிட்டாய் என கூறாமல், நம் எல்லைக்குள் அவனுக்கு தேவையானது எங்குள்ளது என்ற தகவலை வழங்க வேண்டும். அப்போது தான் விண்ணுக்கு சென்றதற்கு பலன் கிடைக்கும்.தமிழனாக பிறந்த எல்லாரும் தமிழுக்கு ஏதாவது விட்டுச் செல்ல வேண்டும்.
பழம்பெருமை பேசாமல் நாம் என்ன செய்தோம் என பார்க்க வேண்டும். உலகின் முதல் விஞ்ஞானி விவசாயி. விண்ணில் ஆராய்ச்சி செய்பவர்கள் மட்டும் விஞ்ஞானி இல்லை. மண்ணில் ஆராய்ச்சி செய்பவர்களும் விஞ்ஞானி தான். நம்மாழ்வார் தான் சிறந்த விஞ்ஞானி" என்றார்.
இதையும் படிங்க:
மாணவர்கள் இணையத்தை வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை