தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சென்னை மாவட்டம் ஆவடி மாநகராட்சியைச் சேர்ந்த ஜாபர் எனும் சுகாதார ஆய்வாளர் ஒருவர் மக்களை கவரும் வகையில் கரோனா குறித்த பாடல்களை பாடியும், அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவரது இச்செயல் பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
அரசு ஊழியராக இருந்தாலும், தனது சுய விருப்பத்தின் அடிப்படையில், கரோனா பரவலில் இருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து கானா பாடல்களை பாடி அதனை பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற செயலிகளில் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதற்கு முன்னதாக, அவர் டெங்கு குறித்த சில பாடல்களையும் பாடியுள்ளார். தற்போதுவரை சுமார் 15 பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.
சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது, மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சந்தைகள், சாலைகள் போன்ற இடங்களைத் தேர்வு செய்து ஒலிப்பெருக்கி மூலம் தனது பாடலைப் பாடி பொதுமக்களை கவர்ந்து வருகிறார். சமூக அக்கறையுடன் ஜாபர் மேற்கொண்டு வரும் இச்செயல்களை மக்கள் மட்டுமல்லாது முதலமைச்சர், அமைச்சர்கள் பாராட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய அவர், "என்னுடைய பாடல்கள் மூலமாக பொது மக்கள் விழிப்புணர்வு அடைந்து தங்களுடைய உயிரை பாதுகாத்துக் கொள்ள முடியும். கை, கால்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு அவர்கள் மனதில் நன்கு பதியும் " என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேப்ப மரத்தை பாதுகாக்கும் குழந்தைகள்