சென்னை: வங்கக்கடலில் நிலவிவரும் மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் வடதமிழ்நாடு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தப்புயல் சென்னைக்கு மிக அருகில் நிலை கொண்டுள்ளதால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள், விமானங்கள் என அனைத்து வித போக்குவரத்துகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
செம்பரம்பாக்கம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அடையாறு ஆற்றில் பெருமளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் விமான நிலையத்தின் பின்பகுதிகள் வழியாக விமான ஓடு பாதையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதையடுத்து, விமானத்தை இயக்க முடியாமல் சென்னையில் விமான சேவைகளை ரத்து செய்வதாக விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டனர்.
அதில், "விமான நிலையத்திற்குள் மழை நீர் வெள்ளம் புகுந்து விமான நிலையத்தின் இரண்டு ஓடு பாதைகளும், தண்ணீரில் மூழ்கி உள்ளதால், விமான நிலையம் இன்று(டிச.4) திங்கட்கிழமை இரவு 11 மணி வரையில் மூடப்படுகிறது. அதன் பின்பு விமான சேவை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஓடுபாதையில் சூழ்ந்துள்ள மழை நீர் வெள்ளம் இன்னும் வடிய தொடங்காத நிலையில், மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், நாளை(டிச.5) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி வரையில் விமான நிலையம் மூடப்படும். தொடர்ந்து, இன்று(டிச.4) இரவு சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே சென்னை விமான நிலையத்தில் நாளை(டிச.5) காலை 9 மணிக்கு மேல் தான் மீண்டும் விமான சேவை தொடங்க இருக்கிறது" என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை விமான நிலையத்தில் பயணம் செய்ய முயன்ற பெரும்பாலான பயணிகள் விமான நிலையத்தை விட்டு புறப்பட்டுச் சென்ற நிலையில், வெளியூர் பயணிகள் சிலர் வேறு வழியின்றி விமான நிலையத்திலே தவித்து வருகின்றனர்.
மேலும், வெளியூர் பயணிகள் ஹோட்டல்களில் தங்கி நாளை(டிச.4) நிலைமை சீரான பின்பு அவர்களின் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என விமான நிலைய அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல்..!