சென்னை: உலகம் முழுவதும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இருந்து சுற்றுலா மற்றும் வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கையும், மற்ற நாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப விமான சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நாடு முழுவதும் விமானம் மூலம் கோடை விடுமுறை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வோர் மற்றும் சொந்த ஊருக்கு வருவோரின் முன் பதிவு அதிகரித்துவருகிறது. கோடை விடுமுறைக்கான விமான டிக்கெட்டுகள் பாதிக்கு மேற்பட்டவை விற்று தீர்ந்து விட்டன.
அதன் காரணமாக வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்தாண்டு ஏப்ரல் - மே மாதத்தில் சென்னையில் இருந்து கோவா செல்வதற்கு 4500 - 6000 ரூபாய் வரை விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த டிக்கெட் கட்டணம் இது மார்ச் மாத முன்பதிவு விலையை விட அதிகமாக இருக்கிறது.
ஏப்ரல் மாதத்தில் விமான பயணம் மேற்கொள்பவர்களுக்கு சென்னையில் இருந்து கோவா செல்ல ரூ.4,400 ஆகவும், டெல்லிக்கு ரூ.4000 - ரூ.5000 வரையும், மதுரைக்கு ரூ.3500 - ரூ.4500 வரையும் துபாய்க்கு ரூ.25,000 - ரூ.35,000 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து ட்ராவல் ஏஜென்சிகள் தரப்பில், "பொதுவாகவே ஏப்ரல் மாதத்தில் தமிழ் வருட பிறப்பின் போது விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்வது வழக்கம். இந்தாண்டு வெள்ளிக்கிழமை தமிழ் வருட பிறப்பு வருவதினால் வார விடுமுறை சேர்த்து சொந்த ஊர், சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர்ந்துள்ளது. விமான பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து விமான நிறுவனங்கள் கோடை விடுமுறை, வார விடுமுறை, பண்டிகை விடுமுறைகளை கணக்கில் கொண்டு டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி வருகிறது.
இது பயணிகளுடைய எண்ணிக்கைகேற்ப அதிகரித்தாலும் அது பயணிகளை வெகுவாகவே பாதிக்கும். இருந்தாலும் கடைசி நேரத்தில் பயணத்தை மேற்கொள்வோர் விமான சேவையே நம்பியுள்ளனர். அதனால் அதிக கட்டணத்தை செலுத்தி செல்கின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: TNTET Exam: ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 ஹால்டிக்கெட் வெளியீடு