துபாயிலிருந்து மீட்பு விமானத்தில் சென்னைக்கு பெரியளவில் கடத்தல் தங்கம் கடத்தி வருவதாகவும், விமான நிலைய ஊழியர்கள் துணையுடன் இந்தக் கடத்தல் சம்பவம் நடப்பதாகவும் சென்னை விமானநிலைய சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துபாயிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீட்பு விமானப் பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து சோதனை செய்து அனுப்பினர்.
அவ்வாறு நள்ளிரவில் வந்த துபாய் விமானப் பயணிகள் அனைவரும் சோதனை முடிந்து வெளியே சென்றுவிட்டனர். ஆனால், கடத்தல் தங்கம் சிக்கவில்லை. இதையடுத்து சுங்கத் துறையின் தனிப் பிரிவினர் விமானநிலைய கழிவறை, குப்பை தொட்டிகளைச் சோதனையிட்டனர். அப்போது முதல் தளத்தில் ஏரோபிரிட்ஜ் அருகேயுள்ள ஆண்கள் கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் தங்கக் கட்டிகள் அடங்கிய பொட்டலம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த தங்கக்கட்டி பொட்டலத்தை எடுக்க வருபவரை கையும் களவுமாகப் பிடிக்க ரகசியமாக காத்திருந்தனர்.
அதிகாலை 4.30 மணியளவில் விமானநிலைய தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், அந்த கழிவறையை சுத்தம் செய்ய உள்ளே சென்றனர். அவா்கள் வெளியே வந்ததும், நிறுத்திச் சோதனையிட்டனர். அப்போது அவர்களுடைய பைக்குள் தங்கக்கட்டிகள் அடங்கிய பொட்டலம் இருந்துள்ளது. உடனே அந்த பொட்டலத்தைக் கைப்பற்றி பிரித்து பார்த்து சோதனை செய்தனர்.
இதையடுத்து சுங்கத்துறையினா் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினா். அப்போது சென்னை சா்வதேச விமானநிலையத்தில் உள்ள தனியாா் ஒப்பந்த நிறுவனத்தில் (சா்வீஸ் மாஸ்டா் கிளினிங்) பணியாற்றும் ஊழியா்களான ஞானசேகா்(31), சங்கா்(30), சுப்ரவைசா் குமாா்(30) ஆகிய 3 பேரை முதலில் கைது செய்து விசாரித்தனா்.
அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் விமானங்களிலும், கழிவறைகளிலும் தங்கத்தை மறைத்து வைத்துவிட்டு தலைமறைவான கடத்தல் ஆசாமிகள் திருச்சியைச் சோ்ந்த சேக் அா்ஸச்(35), சென்னையைச் சோ்ந்த சையத் இப்ராகீம் ஷா(21) ஆகியோரையும் கைது செய்தனா்.
சென்னை விமானநிலையத்தில் ஒரே நேரத்தில் ரூ. 3.6 கோடி மதிப்புடைய 6.9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு,விமானநிலைய ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் 3 போ் உட்பட 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.