அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சமீபத்தில் சென்னை, கோவை, வேலூர், மதுரை என 4 மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னை மண்டலத்திலுள்ள வட சென்னை வடக்கு, வட சென்னை மேற்கு, வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்திய மாவட்டம், காஞ்சிபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு மற்றும் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர்களுடன் சென்னை மண்டல செயலாளர் அஸ்பயர் கே.சுவாமிநாதன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இதில், கரோனா நோய் தடுப்பு பணியில் தமிழ்நாடு அரசு இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக செயல்படுகிறது. நியாய விலை கடையின் மூலம் அத்தியாவசிய பொருள்கள் தங்கு தடையின்றி கிடைத்துவருகிறது. குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுவருகிறது.
ஊரடங்கு காலத்திலும், தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதில் அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதன் காரணமாக மாநிலத்தில் தொழிற்சாலைகள் அமைக்க, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட நிறுவனங்கள் முன்வருகின்றன.
இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சி தலைவர் கரோனா மூலம் எப்படியாவது அரசியல் ஆதாயம் பெற்றுவிட வேண்டும் என்று ஒற்றை குறிக்கோளுடன் 'ஒன்றிணைவோம் வா' என்று ஒரு பொய் பரப்புரைகளை அவர்களது ஊடகங்கள் மூலம் செய்துவருகிறார். இவை அனைத்தும் அதிகாரத்திற்கு வருவதற்காக நடத்தப்படும் நாடகங்கள் என்பதை நாம் (தகவல் தொழில் நுட்ப பிரிவு) ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழிக்கவேண்டும்.
அதிமுக அரசின் சாதனைகள், மக்கள் நல திட்டங்கள், கரோனா தடுப்பில் சிறப்பாக செயல்படுவது, புதிய தொழிற்சாலைகள் வருவது அதனால் எண்ணற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளதை அனைத்து மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில் நாம் செயல்படவேண்டும்.
2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தகவல் தொழில் நுட்பம் மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே அதற்கேற்ப தற்போது வந்துள்ள புதிய தொழில் நுட்பங்கள் மூலம் முன் எப்போதும் இல்லாத வகையில் தகவல் தொழில் நுட்பப் பிரிவில் உள்ளவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘உண்மையை மறைக்க நினைப்பதே மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம்’ - ஸ்டாலின் காட்டம்