சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் சரஸ்வதி (70). இவர் பல்லாவரத்தில் உள்ள அவரின் மகளின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவருவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை (10/2/20) பல்லாவரம் சென்றுவிட்டு மாலை நான்கு மணிக்கு மேல் பல்லாவரத்தில் இருந்து அரசுப் பேருந்தில் ஏறி அனகாபுத்தூர் அம்பேத்கர் சிலை அருகே இறங்கியுள்ளார்.
மூதாட்டி அனகாபுத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் மூன்று பேர் ஆட்டோவில் வந்து இறங்கி, பக்கத்தில் கலவரம் நடப்பதாகவும், அவரிடம் இருக்கும் நகைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் கூறி நகைகளை அவர்களே கழட்டி நெகிழிக் கவரில் போட்டு மடித்துக் கொடுத்துள்ளனர்.
மூதாட்டி சிறிது தூரம் சென்று கவரைப் பிரித்து பார்த்தபோது நகைகள் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து சங்கர் நகர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் சங்கர் நகர் காவல் துறையினர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று அங்கு இருந்த சிசிடிசி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன்படி, ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து தேடிவந்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்ற காவல் துறையினர், ஆட்டோ உரிமையாளரைக் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பிச் சென்ற இருவரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சாட்சி விசாரணை தொடங்கியது