செங்கல்பட்டு: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கான உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாம் இன்று (டிச.26) நடைபெற்றது. தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற இவ்விழாவில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கலந்து கொண்டு மாணவ மாணவர்களிடையே பேசினார்.
அப்போது பேசிய அவர், ’அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவர்களிடையே, நாம் அரசுப் பள்ளியில் படிக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை எப்போதும் இருக்கக் கூடாது. அரசுப் பள்ளியில் படித்தாலும் உயர் பதவிகளுக்கு வரலாம் என்பதற்கு நானே ஒரு எடுத்துக்காட்டு. நானும் அரசுப் பள்ளியில் படித்த பிறகு தான், இந்திய ஆட்சிப் பணி தேர்வு எழுதி தற்போது மாவட்ட ஆட்சியராக உள்ளேன்.
அப்போதெல்லாம், ஒன்று பொறியியல் அல்லது மருத்துவம் என்ற இரண்டு படிப்புகள் மட்டுமே பிரபலமாக இருந்தன. ஆனால், தற்போது, பல உயர் படிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வும் வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளன.
மாணவர்கள் தங்களுக்கென ஒரு குறிக்கோள், திடமான தீர்மானத்தை வைத்திருக்க வேண்டும். அப்போது தான் படித்து பதவிக்கு வரும் பொழுது, பணி செய்யும் போது ஒரு ஆத்ம திருப்தி உண்டாகும். கிடைத்த பணியை செய்வது என்பது வேறு. உள்ளார்ந்த விருப்பத்துடன் விரும்பிய பணியை செய்வது என்பது தான் நன்மை பயக்கும்.
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது தான், தாங்கள் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று தீர்மானிக்கும் பக்குவம் மாணவர்களுக்கு வரும். விருப்பம் ஒன்றாக இருந்து, வேறு ஒரு துறைக்கு பணிக்கு செல்லும் பொழுது பணியில் நிறைவு இருக்காது’ எனப் பேசினார்.
விழாவில் மதுராந்தகம் சுற்றுவட்டார அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து!