சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்தில், இயக்குநர், இணை இயக்குநர், உதவி இயக்குநர், தட்டச்சர், கண்காணிப்பாளர் என பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனால் தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகம், கரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியிருக்கிறது.
கரோனா அச்சத்தின் காரணமாக, தினமும் 250 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில் சுமார் 50 ஊழியர்கள் மட்டும் காலை 11 மணி அளவில் அலுவலகத்திற்கு வந்து, பிற்பகல் 4 மணிக்கு வீட்டிற்குச் சென்றுவிடுவதாகவும், இதனால் பல்வேறு பணிகள் தேங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, தொடக்கக்கல்வித்துறை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை ஆகிய இருபெரும் துறைக்கு பொறுப்பு வகிக்கக்கூடிய பழனிசாமியிடம், மூன்றாவதாக தேர்வுத்துறை இயக்குநர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வுத்துறை பொறுப்பினையும் கூடுதலாக கொண்டுள்ள இயக்குநர், இதுவரை அலுவலகம் வராமல் தொலைபேசி வாயிலாகவே, அனைத்துப் பணிகளையும் பார்த்துவருவதாகவும், இதனால் விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களுக்கு உரிய நிதி தற்போது வரை அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை தயாரிப்பது, முடிவுகளை வெளியிடவேண்டியது என பல்வேறு பணிகள் தேங்கி உள்ளன. ஊழியர்கள் போதிய அளவு ஒத்துழைப்பு அளிக்காத பட்சத்தில், இந்தப் பணிகளை நிர்ணயித்த காலத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்படும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்று பெறும் பொறுப்புகளை சுமந்துகொண்டு, தேர்வுத்துறை பணிகளை எப்படி ஒரு இயக்குநரால் கவனிக்கமுடியும் என்ற கேள்விகளையும், தேர்வுத்துறை பணியாளர்கள் எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க:கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்தாகுமா? - உயர் கல்வித்துறை அமைச்சர் பதில்!