நடிகர் ராகவா லாரன்ஸ் திரைப்படத்துறை மட்டுமின்றி சமூக சேவையிலும் மிகுந்த ஆர்வமுடையவர். இவர் மக்கள் சேவை நற்பணி மன்றம் என்ற சேவை மையத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து உதவி தொகை பெற்று மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பொதுசேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றார்.
இதனையடுத்து ராகவா லாரன்ஸ் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கி அதன் மூலம் பலபேரிடம் லட்சகணக்கில் பணம் வசூலிப்பதாக சென்னை, சேலம், பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து பாதிக்கப்பட்ட நபர்கள் அவரது மக்கள் சேவை மன்றத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகார்களை மக்கள் சேவை மன்றத்தினர் உரிய ஆவணங்களுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்து புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட ஆணையர் இந்த வழக்கை சைபர் கிரைம் பிரிவிடம் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளார்.
இது போன்ற போலியான இணைய தளங்களை மூடவும், ராகவா லாரன்சின் பெயருக்கு அவதூறு பரப்பி வருபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் உறுதியளித்துள்ளார்.