சென்னை: அர்ஜென்டினாவைச் சேர்ந்த எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா என்ற சே குவேரா, சோசலிசப் புரட்சியாளர் ஆவார். மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் புரட்சிகளில் பங்கு பெற்ற போராளி என பல முகங்களைக் கொண்டவர். இவரது மகள் டாக்டர் அலெய்டா குவேரா திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார்.
முதன்முறையாக சென்னை வந்த அலெய்டா குவேராவை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பேபி, ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தொழிற்சங்க தலைவர் ரங்கராஜன், மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்பட ஏராளமானவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
சென்னையில் 3 நாள் தங்கி இருக்கும் அலெய்டா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். அலெய்டாவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாளை சென்னையில் நடக்கும் பாராட்டு விழாவில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, காங்கிரஸ், மதிமுக உள்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உலக புரட்சியின் நாயகன் சே குவேரா மகள் அலெய்டா குவேரா சென்னை வந்துள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க பொருளாதாரத் தடையை எதிர்த்து கியூபாவில் சோசலிச கட்டுமானம் நடக்கிறது. உலகத்தின் பல நாடுகளுக்கு கரோனா பாதிப்பு உள்பட பல பாதிப்புகளுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறது, சோசலிச கியூபா" எனக் கூறினார்.
இதையும் படிங்க: எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாளில் கண்ணை கவரும் வகையில் கோலப்போட்டி