சென்னை, கோயம்புத்தூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் ஆகஸ்ட் 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது.
கோயம்புத்தூர், சென்னையில் 811 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடந்தது.
கோவையில் வேலுமணியின் இல்லம், அவரது சகோதரர்கள் அன்பரசன், செந்தில் குமார், பொறியாளர் சந்திரபிரகாஷ், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் லட்சுமணன் இல்லம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்தனர்.
சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவை
இந்த சோதனையில் எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இருந்து 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாய் பணமும், நிலம் தொடர்பான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட பரிவர்த்தனைகள், 2 கோடி ரூபாய்க்கான வைப்புத் தொகை, ஹார்ட் டிஸ்க் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த சோதனைகளின் ஒரு பகுதியாக, தற்போதைய மாநகராட்சி தலைமைப் பொறியாளர் எல்.நந்தகுமாரின் இல்லமும் சோதனைக்குள் கொண்டுவரப்பட்டது. இதனால் மாநகராட்சி தலைமைப் பொறியாளர் எல்.நந்தகுமாரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அறப்போர் இயக்கம் மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளது.
பணியிடை நீக்கம் செய்ய கோரிக்கை
இதுதொடர்பாக அந்த இயக்கம் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ”நந்தகுமார் 2015ஆம் ஆண்டில் பேருந்து வழித்தடங்களின் கண்காணிப்பு பொறியாளராக இருந்தார். முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட டெண்டர்களுக்கான முக்கிய டெண்டர் அலுவலராக இருந்துள்ளார். இதேபோல், 2014 முதல் 2018 வரையிலான பல மழைநீர் வடிகால் டெண்டர்கள் உள்ளன.
மேலும், இது விசாரணையின் ஒரு பகுதியாகும். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, வீடுகளில் சோதனை நடைபெற்ற பிறகும் அவர் மாநகராட்சி அலுவலராகவே தொடர்வது ஆதாரங்களை அழிக்க வழிவகுக்கும். விசாரணைக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தலாம்.
எனவே, விசாரணை முடியும்வரை அவரை சென்னை மாநகராட்சியில் இருந்து பணியிடை நீக்கம் செய்வது மிகவும் முக்கியம். அதேபோல் நகர்ப்புற சுகாதார மையத்தில் ஊழல் டெண்டருக்கு துணை போகும் அலுவலர்களையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாதுகாப்பு கேட்டு மனு அளித்த எஸ்.பி. வேலுமணி சகோதரர்!