சென்னை: கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற 'ஒளிரும் தமிழ்நாடு - மிளிரும் தமிழர்கள்' விழாவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விண்வெளி விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் சிவன், சந்திரயான்-1 திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை , சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி, விஞ்ஞானிகள் நாராயணன், ராஜராஜன், சங்கரன், வனிதா, ஆசிர் பாக்கியராஜ் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நாராயணன், "விஞ்ஞானிகளை ஒரே நேரத்தில் அழைத்து பாராட்டியது மகிழ்ச்சி. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்துள்ளது. தமிழக முதலமைச்சர் போட்டுள்ள அடித்தளம் இந்திய நாட்டையும், தமிழ்நாட்டையும் வளர்ச்சி அடைய செய்யும். மேலும் சந்திரயான்-1, சந்திரயான்-2 நிலவில் தரை இறங்கிய போது தோல்வி அடைந்தாலும், அதனை தொடர்ந்து சந்திரயான்-3 தரையிரக்கப்பட்டது. இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை உலகளவில் செய்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி நிகார் ஷாஜி பேசும்போது, "இஸ்ரோ கூட்டு முயற்சிக்கு ஒரு மைல்கல் தான் ஆதித்யா எல்-1 விண்கலம், சாட்சியான மைல்கல். ஆதித்யா எல்-1 விண்கலம் திட்டமிட்ட இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது. ஆதித்யா எல்-1 செப்டம்பர் 2-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்தில் இருந்து ஏவப்பட்டு தற்பொழுது சூரியனில் எல்-1 நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறது.
ஜனவரி மாதம் முதல் வாரத்தில் சூரியனில் ஆய்வுப்பணியை மேற்கொள்ள உள்ளது. இந்த நேரத்தில் எனது பள்ளி கல்லூரி நாட்களையும், ஆசிரியர்களை நினைவுகூற விரும்புகிறேன். ஆசிரியர்கள் நீண்ட அர்பணிப்புடன் கல்வியை ஊக்குவித்தனர். மாணவர்களுக்கு கூற வேண்டியது முயற்சி திருவினையாக்கும் இது தான் நான் இளம் தலைமுறையினருக்கு சொல்லும் செய்தி” எனத் தெரிவித்தார்.
சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பேசும்போது, "நாம் எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் எப்படி படிக்கிறோம் என்பதும், புரிதல் உடன் படிக்கிறோமா என்பதும் தான் முக்கியம். விடா முயற்சி ரொம்ப முக்கியம். நம்முடைய வெற்றிக்கு இவை கை கொடுக்கும்" எனத் தெரிவித்தார்.