சென்னை: வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூலை 19, 20ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூலை 21, 22ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை : இன்று (ஜூலை 18) இலங்கையை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மத்திய பிரதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - 12 பேர் உயிரிழப்பு