தமிழ்நாடு முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சிலம்பரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகி்யோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுபான கடைகள் அருகில் உள்ள பார்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகளவில் நடக்கிறது. பார்களின் அருகில் விபத்துக்களும் நடைபெறுகிறது என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுபான கடைகள் மற்றும் பார்களை மூடுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், மதுக்கடை பார்களை மூட வேண்டும் என உரிமையாக கோர முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோதமாக, உரிமம் இல்லாமல் செயல்படும் பார்களை மூடக் கோரி மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி வழங்கினர்.