சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு 2014, 2016ஆம் ஆண்டுகளில் 234 உதவி பேராசிரியர்கள் முந்தைய நிர்வாகிகளால் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் அறக்கட்டளையில் புகார்கள் வந்ததையடுத்து அறக்கட்டளை தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் நியமிக்கப்பட்டார்.
அவர், இந்த நியமனங்கள் தொடர்பாக ஆய்வு செய்தபோது 105 உதவி பேராசிரியர்கள் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து 105 உதவி பேராசிரியர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில், பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தை ஏன் அரசு ஏற்று நடத்தக்கூடாது என தமிழ்நாடு அரசு, அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், பச்சையப்பன் அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு ஏற்கும் நடைமுறைகளுக்கு தடைவிதிக்கக் கோரியும், 105 உதவி பேராசியர்களை மீண்டும் நியமிக்கக் கோரியும், பச்சையப்பன் அறக்கட்டளையின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கந்தசாமி கல்லூரியின் உதவி பேராசிரியர் முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, பச்சையப்பன் அறக்கட்டளை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள் தொடர்பாக கூடுதல் மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி மாதம் ஒத்திவைத்தார்.