2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப. சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனைவிட, 3,354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த 4ஆம் தேதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த சிதம்பரம், இன்று இரண்டாவதாக சாட்சியம் அளித்தார்.
அவரிடம் குறுக்கு விசாரணை செய்த ராஜ கண்ணப்பன் தரப்பு வழக்கறிஞர் ராஜசேகரன், 2007ஆம் ஆண்டு ப. சிதம்பரம் எழுதிய புத்தகத்தில், அரசியல் ஒரு வியாபாரம் என்று குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி, ”வாக்காளர்களுக்குப் பணபட்டுவாடா செய்வது முதலீடு என நினைக்கிறீர்களா? வாக்கு எண்ணிக்கையில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் வித்தியாசம் ஏற்பட்டதா?” என்பன போன்ற பல கேள்விகளை எழுப்பினார். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகக் கூறிய குற்றச்சாட்டுக்களை சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்தார்.
அவரிடம் 2 மணி நேரத்திற்கும் மேல் நடந்த குறுக்கு விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து, சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ராஜகோபாலிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என சிதம்பரம் தரப்பில் கோரப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: 'மண்ணின் அடிப்படையிலே குடியுரிமை வழங்க வேண்டும்' - ப. சிதம்பரம் பேச்சு