இந்திய தொழில்துறை சார்பில் தென்னிந்தியாவில் எரிசக்தித் துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த கருத்தரங்கம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில், எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், வருங்காலத்தில் எரிசக்தித் துறையின் பங்கு, தேவை உள்ளிட்டவை குறித்து தொழில் துறை நிபுணர்கள் விரிவாக விவாதித்தனர். இந்தக் கருத்தரங்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டின் அவசியம் குறித்து ஏராளமானவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய மத்திய முன்னாள் வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, "தற்போதைய சூழலில் நாம் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது மிகவும் அவசியம். இது வெறும் வாகனங்கள், நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல, மக்களின் உடல் நலமும் இதில் அடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வெறும் ஜிடிபி போன்ற பொருளாதார குறியீடுகளை மட்டும் பார்க்காமல் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துவருகிறார். மக்களின் வாழ்க்கையை வசதியாக மாற்ற அரசு முயற்சி செய்துவருகிறது" என்றார்.
கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துகள்:
நகரமயமாதலால் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவின் மொத்த எரிசக்தி உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு 22 விழுக்காடாக உள்ளது. இதனை 40 விழுக்காடாக உயர்த்துவதே இலக்கு. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 40 ஜிகா வாட்டாக (1 கோடி வாட் 1 ஜிகா வாட்) இருந்த இந்தியாவின் புதுப்பிக்கத்தக்த எரிசக்தியின் அளவு தற்போது 80 ஜிகா வாட்டாக உயர்ந்துள்ளது.
மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இதனை 175 ஜிகா வாட்டாக உயர்த்த வேண்டும். நிலக்கரி போன்ற பாரம்பரிய எரிசக்தியின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும். பாரிஸ் பருவநிலை மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி நமது கரியமில வெளியீட்டை தொழில்மயமாக்கலுக்கு முந்தைய நிலைக்கு கொண்டுவர வேண்டும்.
இன்றைய சூழலில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு நிதி கிடைப்பதில் சில சிரமங்கள் உள்ளன. இருப்பினும் இது கனிசமான அளவுக்கு உயர்ந்துள்ளது. இனிவரும் நாள்களில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை கிரீன் பாண்டுகள் மூலம் நிதி திரட்டும் நடைமுறை இந்தியாவில் பிரபலமடையும். இவ்வாறு அதில் விவாதிக்கப்பட்டது.