தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பின் நிலை குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசு நியமித்துள்ள சுகாதாரக் குழு மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் (ஜூலை 8) சென்னை வந்தது.
மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையில், மத்திய அரசு இணை செயலரும், தமிழ்நாட்டின் கண்காணிப்பு அலுவலருமான ராஜேந்திர ரத்னா, மின்னணு மருத்துவ ஆவண இயக்குனர் ரவீந்திரன், மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணர்கள் சுகாஸ் தந்துரு, பிரவீன், ஜிப்மர் மருத்துவர்கள் ஸ்வரூப் சாகு, சதிஷ் ஆகிய ஏழு நபர்கள் அந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இந்த குழுவினர் நேற்று (ஜூலை 9) சென்னையில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ராஜீவ்காந்தி மருத்துவமனை, கிங்ஸ் வளாகத்தில் உள்ள கரோனா பிரத்யேக மருத்துவமனை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளிட்ட ஆறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் க . சண்முகம் தலைமையில் மத்திய குழுவினர் மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணமலை, ராமநாதபுரம் , சேலம், தேனி, ராணிப்பேட்டை, விருதுநகர் ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்களுடன் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
மேலும் தமிழ்நாட்டில் நோய்த்தொற்றின் நிலை, மருத்துவ வசதிகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கேட்டறிந்தனர். இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் செயலாளர் திருமதி ஆர்த்தி அகுஜ், தமிழ்நாட்டிற்கான மத்திய அரசின் கண்காணிப்பு அலுவலர் மற்றும் இணைச் செயலாளர் ராஜேந்திர ரத்னா, டெல்லி ( இ.எம்.ஆர் ) இயக்குநர் பி . ரவிந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் .
இதையும் படிங்க: சாத்தான்குளம் விவகாரம்: சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு