சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வந்துள்ளார். அந்த வகையில் சென்னை எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி அரங்கில், இலக்கியத் துறையில் வழங்கப்படும் சரஸ்வதி சம்மான் விருது பெற்றுள்ள எழுத்தாளர் சிவசங்கரிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் பேசிய நிர்மலா சீதாராமன், "எழுத்தாளர்களுக்கு கிடைக்க கூடிய விருதுகளை கௌரவிக்கும் விழாவானது ஒரு பண்டிகை போல கொண்டாடப்பட வேண்டும். எழுத்துக்கு மதிப்பு இன்னும் இருக்கிறது. திருக்குறள், சிலப்பதிகாரம், புறநானூறு என பேசும் போது அந்த வார்த்தைக்கு உரிய பலமும், சக்தியும் இருக்கிறது. இளைஞர்கள் புதுமையாக தொடங்கும் முயற்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அதிகம் உதவி செய்து வருகிறார்.
தமிழ்நாட்டில் வாழ்ந்த ஜிடி நாயுடு தான் அனைவரையும் விட அதிகம் புதுமையான கண்டுபிடிப்புகளை கொண்டு வந்தவர். உலகத்தில் எங்கு போனாலும் ராமாயணம் உள்ளது. புத்தகத்தின் மூலம் வரக்கூடிய கருத்துகளை நல்ல விதமாக பயன்படுத்த வேண்டும். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்று கணியன் பூங்குன்றனார் சொன்னதை தான் பிரதமர் பின்பற்றுகிறார்.
இந்த வாசகம் தான் ஜி20 மாநாட்டிற்கான லோகோவில் 'வசுதேவக குடும்பகம்' எனவும் 'ஒன் எர்த் ஒன் பேமிலி' எனவும் ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு உள்ளது. சிறியவர்கள் மேலே வந்திருக்கிறார்கள், பெரியவர்கள் கீழே வந்திருக்கிறார்கள், யாரையும் மேலே, கீழே என்று நினைக்காமல் நடுநிலையோடு இருங்கள். அந்த சரஸ்வதி தேவியையே எழுத்திற்காக சிவசங்சங்கரிக்கு வழங்கியுள்ளோம்.
எழுத்தின் மூலம் மதவெறியையோ, இன வெறியையோ, மக்களுக்கிடையே கசப்புகளையோ ஏற்படுத்த கூடாது. அந்த மாதிரியான எழுத்துகளும் இருக்கிறது. பாரதியின் ஒவ்வொரு எழுத்தும் அணுகுண்டு போன்றது. அதை பாடிய சிறுவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக கட்சி அலுவலக பொருட்களுக்கு உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி