சென்னை: பத்திரிகையாளர் வராகி என்பவர் கடந்த மே 24ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், சிபிஐ மற்றும் என்ஐஏ ஆகியவற்றிற்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் பதவி வகித்து வந்தபோது, வெளிநாட்டினருக்கு பாஸ்போர்ட் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, டேவிட்சன் ஜூன் 2018 முதல் ஜூலை 2020 வரை மதுரை மாநகர காவல் ஆணையராகப் பதவி வகித்தபோது போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டன என குற்றம் சாட்டியுள்ளார். டிராவல் ஏஜென்சியை நடத்திக் கொண்டிருந்த அவரது மனைவி ஜூனிதா டேவிட்சன் மூலம் இந்த முறைகேடு நடந்ததாக வராகி அவரது புகாரில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று சட்டவிரோதமாக இலங்கைக்குச் செல்ல முயன்ற முத்துராமன் என்ற இலங்கை நாட்டவரை, குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் போலி ஆவணங்கள் மூலம் போலி பாஸ்போர்ட் பெற்று துபாய்க்கு செல்லவிருந்த பரமசிவம் என்ற மற்றொரு இலங்கை நாட்டினரையும் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர்.
போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே ஜூலை 2021இல் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஜனவரியில் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி போலி இந்திய பாஸ்போர்ட்களை உருவாக்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக மதுரை கியூ பிராஞ்ச் காவல் கண்காணிப்பாளருக்கு மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு உத்தரவிடப்பட்டது. மேலும் விசாரணையை கண்காணிக்கவும் எஸ்பிசிஐடி ஐஜிக்கு உத்தரவிட்டனர்.
இருப்பினும், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை என புகாரில் வராகி தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று, தமிழ்நாடு அரசு மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இதில் முக்கிய பதவியான தமிழ்நாடு காவல் துறையின் உளவுத்துறை பிரிவு ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதத்தை, தலைமையக பொறுப்பிற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதன் காரணத்தினால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிடமாற்றம்!