அண்மையில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள பண்டிட் தீன்தயாள் தொல்லியல் கல்லூரியில் இருந்து முதுகலை தொல்லியல் பட்டயப் படிப்பு 2020-2022ஆம் ஆண்டு அமர்வில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியானது.
அதில் தொல்லியல் மொழிகளான சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய செம்மொழிகளை முதுகலைப் பட்டம் பயின்றவர்கள் இந்தப் பட்டயப்படிப்பில் சேர்வதற்கு குறைந்தபட்ச தகுதியுடையவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பில் செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக உயர் நீதிமன்றக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி, 2004ஆம் ஆண்டிலேயே செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் புறக்கணிக்கப்பட்டது வேதனை அளிப்பதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.

இதன் பின்னர், மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் செம்மொழிகளான தமிழ்,கன்னடம், தெலுங்கு,மலையாளம், ஒடியா, ஆகிய மொழிகளையும் சேர்த்து திருத்தங்களுடன் அரசாணை வெளியிட்டது.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் வரவேற்பு தெரிவித்தனர்.

இதையும் படிங்க:தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழை சேர்க்க வேண்டும் - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்