இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம், தேவாரம் அருகில் உள்ள பொட்டிப்புரத்தில், ஐ.நா. மன்றத்தால் உலகப் பாரம்பரிய பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில், பல லட்சம் டன் பாறைகளை உடைத்து நொறுக்கி, மத்திய அரசு ‘நியூட்ரினோ ஆய்வகம்’ அமைப்பதை எதிர்த்து, தான் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.
இந்த வழக்கில், 2015ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதியன்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழ்வாணன், இரவி ஆகியோரைக் கொண்ட அமர்வு நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை ஆணை பிறப்பித்ததை வைகோ சுட்டிக் காட்டினார்.
நியூட்ரினோ ஆய்வகத்தால் தேனி மாவட்டம், கேரளப் பகுதிகளின் சுற்றுச்சூழல் கெடுவதுடன், நீராதாரமும் பாழ்படும், கடுமையான கதிரியக்க ஆபத்தும் விளையும் என்பதால் தேனி மாவட்ட மக்களிடம் தான் பல கட்டங்களாக விழிப்புணர்வுப் பரப்புரை மேற்கொண்டதை அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் மாநிலங்கள் அவையில் மத்திய அணுசக்தி, விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகக் கூறினார்.
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும், பசுமைத் தீர்ப்பாயத்திலும் நியூட்ரினோ தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கருத்தில் கொள்ளாமல், அனுமதி வழங்குவோம் என்று மத்திய அரசு கூறி இருப்பதற்கு வைகோ தனது கண்டனத்தை தெரிவித்தார்.
தேனி மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முயன்றால், மறுமலர்ச்சி திமுக மக்கள் மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் கடுமையாக எதிர்க்கும் என்று வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார்.