தூய்மை இந்தியா திட்டத்தில் கீழ் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் "ஸ்வச் சரேக்ஷன்" என்ற தலைப்பில் தூய்மை கணக்கெடுப்பு நடத்தி சிறந்த மாநிலங்கள் மற்றும் நகராட்சிகளுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2020ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தூய்மை கணக்கெடுப்பில், 40 லட்சத்துக்கும் மேல் மக்கள் தொகை உள்ள பெரு நகரங்களில் தூய்மையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் புதுமையை புகுத்தியதில் 80க்கு 65 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாநகராட்சி முதல் இடம் பிடித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக தூய்மையைக் கடைபிடிப்பதில் சென்னை மாநகராட்சி 45ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு 235ஆம் இடத்தில் இருந்த சென்னை 2020இல் 45 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
குப்பைகளைத் தனி தனியாக பிரித்து மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்வதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி www.madraswasteexchange.com என்ற வலைதளம் மற்றும் செயலியை உருவாக்கியது.
இதன்மூலம் திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்து விற்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. மேலும் தேவையற்ற கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது போன்ற பல்வேறு தூய்மையில் புதுமை புகுத்தியதால் இந்த விருது வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொது இடங்களில் விநாயகர் சிலைகளுக்கு அனுமதியில்லை: உயர் நீதிமன்ற மதுரை கிளை