சென்னை: கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில், 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 27) நடைபெற்றது. 2023-24ஆம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை பெறப்பட்டன.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு ஆணை மற்றும் சிறப்புப் பிரிவு மாணவர்கள் ஒதுக்கீடுக்கான ஆணைகள் வழங்கி, முதுநிலை மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கான 7.5 விழுக்காடு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் உள் சிறப்பு ஒதுக்கீட்டிற்கு 3ஆயிரத்து 42 விண்ணப்பங்களில் 2ஆயிரத்து 993 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
இவற்றுள் 901 ஆண் மற்றும் 2ஆயிரத்து 92 பெண் விண்ணப்பதாரர்கள் அடங்குவார்கள். மேலும், விளையாட்டு பிரிவிற்கு 179 விண்ணப்பங்களில் 114 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதேபோல் முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 401 விண்ணப்பங்களில் 328 ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றுள் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 80 ஆகும். இந்த சிறப்புப் பிரிவுகளுக்கான நேரடி கலந்தாய்வு கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்று முடிந்துள்ளன.
7.5 விழுக்காடு ஒதுக்கீட்டிற்கான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்தம் 486 எம்பிபிஎஸ் இடங்களும் 136 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 622 இடங்கள் உள்ளன. இந்த 7.5 விழுக்காடு அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின் சிறப்பு உள்ஒதுக்கீட்டிற்கு ஆயிரத்து 398 மாணவ மாணவியர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு, 622 இடங்கள் நிரப்பபட்டன.
மேலும், விளையாட்டுப் பிரிவிற்கு 25 மாணவ மாணவியர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு எட்டு இடங்களும், முன்னாள் படைவீரர் பிரிவு ஒதுக்கீட்டிற்கு 25 மாணவ மாணவியர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு 11 இடங்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 80 மாணவ மாணவியர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு 78 இடங்கள் நிரப்பப்பட்டதோடு, மொத்தம் 719 இடங்கங்கள் நிரப்பட்டுள்ளன” என்றார்.
11 புதிய செவிலியர் கல்லூரிகளுக்கு அனுமதி: தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் விரைவில் தென்காசி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கவதற்கு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், தமிழ்நாட்டில் புதிதாக 11 செவிலியர் கல்லூரிகள் தொடங்கவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கே.பி.அன்பழகன் மீதான குற்றவழக்கு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!