நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசுத் தரப்பில் உள்துறை துணைச் செயலர் ராஜீவ் எஸ். வைத்யா பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
- தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் 2017 பிப்ரவரி 20ஆம் தேதி உள் துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப்பெற்றது.
- மசோதாக்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்படி அன்றைய தினமே சட்டம், நீதி, சுகாதாரம், மனித வள மேம்பாடு துறைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
- இந்தத் துறைகளில் கருத்துகளை பெற்ற பிறகு 2017 செப்டம்பர் 11ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
- செப்டம்பர் 18ஆம் தேதி இரண்டு மசோதாக்களை நிறுத்திவைத்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
- பின்னர், செப்டம்பர் 22ஆம் தேதி இரண்டு மசோதாக்கள் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட நான்கு பேர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.