சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் 120 பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ள நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி, 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக கூறி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இதனிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக செல்ல விரும்புவதாகவும் தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனால், இந்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தர்மராஜ், ஒய்.பாலாஜி ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், போக்குவரத்துத் துறையில் வேலை வழங்க பணம் பெற்ற புகார் தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
மேலும், அமலாக்கத் துறையும் தங்களது தரப்பு விசாரணையை நடத்த அனுமதி அளித்து மே 16ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியை கைது செய்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது சகோதரர் அசோக்கிற்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் மேற்கொண்டு, அவருக்கு பல முறை சம்மன் அனுப்பிய போதும் ஆஜராகாமல் தலைமறைவாகிவிட்ட நிலையில் அவர் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், வேலை வாங்கித் தருவதாக கூறி, செந்தில் பாலாஜி மோசடி செய்த வழக்கில் அப்போது பணியமர்த்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துனர் என 120க்கும் மேற்பட்ட நபர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி அனுப்பியுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோர் மீது 2018இல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், அந்த வழக்கை விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளது.
இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி, செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது நேர்முகத் தேர்வு நடத்திய அதிகாரிகளிடமும் சமீபத்தில் விசாரணை நடத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பணியமர்த்தப்பட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் என அனைவருக்கும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மேலும், இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஜூலை 6ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நான்காவது மாடியில் உள்ள வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு அலுவலகத்தில் உரிய ஆவணத்துடன் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளனர்.
இதையும் படிங்க: Senthil Balaji: செந்தில் பாலாஜியின் பதவி நீக்கம் நிறுத்தி வைப்பு - ஆளுநர் கடிதம்