சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் பெரியகருப்பன், "தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளால் ஏதேனும் ஒரு வகையில் 75 சதவீத மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். விவசாயிகளின் இழப்புகளை சரி செய்யும் பணிகளில் கூட்டுறவு வங்கிகள் ஈடுபட்டு வருகின்றன. கூட்டுறவுத்துறை சார்பில் பண்டக சாலைகள், மருந்தகங்களும் செயல்பட்டு வருகின்றன.
கூட்டுறவு மருந்தகங்களில் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படுகின்றன. இந்தாண்டு கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு 12,000 கோடி ரூபாய் கடன் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கபட்ட நிலையில், இதுவரை 8,941.13 கோடி ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 11.72 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள கூட்டுறவு சங்கங்கள் திருத்த சட்ட மசோதா, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது. இந்த மசோதா விவகாரத்தில் மாநில உரிமையை தமிழக முதலமைச்சர் விட்டுக்கொடுக்கமாட்டார். பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார்" என்று கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ஹேப்பி நியூஸ்!