திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மொபைல் டவர்கள் அமைப்பதை எதிர்த்து அப்பகுதியைச் சேர்ந்த லோகநாதன் உள்பட 11 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதி மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு கட்டிடங்களில் மொபைல் டவர் அமைக்க அனுமதியளிக்கும் வகையில் 2001ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை, தனியார் கட்டடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது, அந்த அரசாணையின்படி, மொபைல் டவர் அமைக்க அந்தந்த மாவட்ட அலுவலர்களிடம் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மொபைல் டவர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விதிமுறைகள் ஏதும் இதுவரை மத்திய அரசால் அறிவிக்கப்படாத நிலையில், உரிமம் வழங்க மறுக்க முடியாது என மொபைல் ஆபரேட்டர் நிறுவனத்தின் சார்பில் மறுப்பு தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, எந்த விதிகளும் இல்லாத நிலையில், மொபைல் டவர் அமைக்க அனுமதி பெறத் தேவையில்லை என்று கூற முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிமம் பெறாமல் மொபைல் டவர் அமைத்துள்ள நிறுவனங்களுக்கு ஒரு வாரத்திற்குள் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டனர்.