சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தார்.
இதனால் உடனடியாக மோப்ப நாய் உதவியுடன் விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
ஆனால், அங்கு வெடிகுண்டு வைத்ததற்கான எந்த தடயமும் இல்லாததால், மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்கும் முயற்சியில் காவல் துறை விசாரணை மேற்கொண்டது. இதனையடுத்து மிரட்டல் விடுத்த நபரின் தொலைபேசி எண்ணை வைத்து, திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன்(35) என்ற நபரைக் கைது செய்தனர்.
அவரிடம் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், மாற்றுத்திறனாளியான அய்யப்பன் அரசால் வழங்கப்படும் தொகுப்பு வீடுகள் தொடர்பாக நேற்று தலைமை செயலகத்திற்கு சென்றதாகவும், ஆனால், தன்னை அங்கு அனுமதிக்காததால்தான், காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பெருந்துறையில் பயங்கரம் - வடமாநில வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது!