விஜய் தொலைக்காட்சியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகர் ஆரவ். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பட வாய்ப்புகள் அதிகரித்ததால் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர், கவுதம் மேனன் இயக்கியுள்ள ’ஜோஷ்வா இமை போல் காக்க’ படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் ராஹீ என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்தத் தகவல் குறித்து ஆரவ் தரப்பில் எந்தவித விளக்கமும் அளிக்கப்படாத நிலையில், ஆரவ்- ராஹீ திருமணம், பெற்றோர்கள் சம்மதத்துடன் இன்று (செப்.06) காலை சென்னையில் நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு வலியுறுத்திய விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்ற இந்தத் திருமணத்தில், ஆரவ் - ராஹீ குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்தத் திருமண விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், நடன இயக்குநர் கல்யாண் மாஸ்டர், நடிகை காயத்ரி ரகுராம், நடிகர்கள் வையாபுரி, கணேஷ்கர் - ஆர்த்தி, சுஜா வருணி, சங்கீதா, பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி, பாடலாசிரியர் சினேகன், நடிகர் சக்தி உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.