சென்னை: இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் பந்தய மைதானத்தில் நேற்று (ஜன 8) நடந்த கார் பந்தய போட்டியில் கலந்துகொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த கார் பந்தய வீரர் குமார் (59) விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவர், தேனாம்பேட்டை போயஸ் சாலையை சேர்ந்தவர். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் நடத்தி வந்தார்.
சிறு வயது முதலே கார் ரேஸ் மீது ஆர்வம் கொண்ட குமார், பல நாடுகளில் நடந்த கார் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றவர். இந்நிலையில் இருங்காட்டுகோட்டை பகுதியில் உள்ள கார் ரேஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 36 கிலோ மீட்டர் IJTC கார் ரேஸில் கலந்து கொண்டார். இந்த போட்டியில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 15, பேர் பங்கேற்றனர்.அதில் 10வது நபராக குமார் பங்கு பெற்றார்.
ரேஸ் டிராக்கில் முதலாம் ரவுண்டில் வேகமாக காரில் சென்ற குமார், இரண்டாம் ரவுண்டில் வேகமாக காரை ஓட்டி சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து டிராக்கை விட்டு வெளியேறி சுவர் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகம் உடனே கார் பந்தயத்தை நிறுத்திவிட்டு, விபத்தில் படுகாயமடைந்த குமாரை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்திற்கு வந்து விபத்து நடந்தது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் போதுமான பாதுகாப்பு அம்சங்களைக் கையாண்டு கார் ரேஸ் நடத்தப்பட்டுள்ளதா என தீவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்தபோது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதைபதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மேடையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த நாடகக் கலைஞர்!