சென்னை: அருகே பல்லாவரம் அடுத்த திருசூலம் பெரியார் நகர் மெயின் ரோடு பகுதியில் சசிக்குமார் என்பவர் பால் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்றிரவு (ஜூலை 12) வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டுச் சென்ற சசிக்குமார் இன்று (ஜூலை 13) காலை கடைக்கு வந்து பார்த்தபோது ஷட்டரில் இருந்து பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சசிக்குமார் உடனடியாக கடையின் உள்ளே சென்றுபார்த்தபோது கடையில் வைத்திருந்த 4 லட்சம் ரூபாய் மற்றும் ஒன்றரை சவரன் தங்க நகை ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. பின்னர், உடனடியாக இது குறித்து பல்லாவரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்தனர். அதில், இருவர் இரும்பு கம்பியை கொண்டு பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் குற்றப்பிரிவு காவல் துறையினர், சிசிடிவி காட்சியில் பதிவான குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:இலங்கையில் அவசரநிலை பிரகடனம்- தப்பி ஓடிய அதிபர் கோத்தபய ராஜபக்ச