சென்னை: தமிழ் திரையுலகில் ‘எல்லாம் அவன் செயல்’, ‘அவன் இவன்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்கள் மூலம் முன்னணி நடிகராக பிரபலமானவர் ஆர்கே என்ற ராதாகிருஷ்ணா. இயக்குநரும், தயாரிப்பாளரும், தொழிலதிபருமான ராதாகிருஷ்ணா, நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (நவ.10) சுமார் இரவு 7 மணியளவில் ஆர்கே வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரது மனைவியை கட்டிப்போட்டு, கத்தி முனையில் 250 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து ஆர்கே அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் ஆர்கே வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது நண்பர் செந்தில் உள்பட நான்கு பேர் என்பது தெரியவந்தது.
குறிப்பாக ரமேஷின் கூட்டாளியான செந்தில் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய பங்கு வகித்தது தெரியவந்துள்ளது. டிபன்ஸ் சாலையில் காலை 5:30 மணியளவில் செந்தில் என்பவர் இருவருடன் வந்து ஆர்கே வீட்டை அடையாளம் காட்டி விட்டு தனியாக சென்று விட்டு, இரவு கொள்ளை திட்டம் நிறைவேற்றி முடிந்ததும் ஆட்டோவை ஏற்பாடு செய்து வந்து கொள்ளையடித்த நகை பணத்தோடு தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
காலை 5:30 மணிக்கு ஆர்கே வீட்டிற்குள் சென்ற கொள்ளை கும்பல், பதுங்கி இருந்தபடி வீட்டில் இருந்தவரகளை நோட்டமிட்டுள்ளனர். பின்னர், ஆர்கே வின் மனைவியை தவிர அனைவரும் வெளியே சென்றதும், கத்தி முனையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளையர்களை பிடிக்க 8 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் நேபாள் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்களில் உள்ள சிசிடிவிக்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரமேஷின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அவரது நண்பர்கள் உறவினர்களை பிடித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளையர்கள் ஊட்டி மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் கோட்டூர்புரம், பெசன்ட் நகர் பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் நான்கு இடங்களிலும் தனிப்படை காவல் துறையினர் முகாமிட்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். குற்றவாளிகளை பற்றிய தகவல் தெரிந்தால் பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: மதவாதத்தை தூண்டும் வீடியோ: இளைஞர் கைது