காஞ்சிபுரம்: களியனூர் ஊராட்சியின் தலைவியாக வடிவுக்கரசி ஆறுமுகம் செயல்பட்டு வருகிறார். இவருடைய கணவர் ஆறுமுகம் என்பவர் ஊத்துக்காடு அரசு மதுபானக்கடையில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி மாலை களியனூர் ஊராட்சி மன்றத்தலைவி வடிவுக்கரசி மற்றும் அவரது கணவர் ஆறுமுகம் ஆகிய இருவரும் சேர்ந்து மருத்துவமனைக்குச்சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர். ஆறுமுகம் தனது பைக்கை, வீட்டின் வாயிலில் நிறுத்திவிட்டு, இறங்கும்போது மாஸ்க் அணிந்துகொண்டு வந்த 2 நபர்கள் பட்டாக்கத்தியுடன் ஓடிவந்து ஆறுமுகத்தை தலை, கழுத்து, முதுகு போன்ற இடங்களில் வெட்டிவிட்டு பைக்கில் ஏறி தப்பிச்சென்றனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்து, படுகாயமடைந்த ஆறுமுகத்தை அவரது மனைவி மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, தொடர் தீவிர சிகிச்சைப்பெற்று வருகிறார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய நபர்கள் இருவரை வலைவீசித்தேடி வருகின்றனர்.
மேலும் ஆறுமுகத்தை மாஸ்க் அணிந்துகொண்டு வந்து, அவரது மனைவியின் கண் முன்னே அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டும் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகள் ஆறுமுகத்தின் வீட்டின் வாயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படிங்க: மனைவியைக் கொலை செய்த கணவரின் தண்டனைக்குறைப்பு