சென்னை: சென்னை பாண்டி பஜார் மேம்பாலம் அருகே ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடுவதற்காக முயற்சித்த பிரபல துணிக்கடை உரிமையாளரின் கார், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர், ரவிவர்மா(60). இவர் நேற்று மதியம் பாண்டிபஜார் மேம்பாலம் வழியாக கடைக்குச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மேம்பாலத்தில் இருந்து வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ரவிவர்மா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட ரவி வர்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க: Airbus Beluga: மீண்டும் சென்னை வந்த 'ஏர்பஸ் பெலுகா' விமானம்: காரணம் என்ன?
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாண்டிபஜார் போலீஸார், வழக்குப்பதிவு செய்த நிலையில் காரை ஓட்டி வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சாம்சுதீன் என்பவரை கைது செய்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் பிரபல களஞ்சியம் டெக்ஸ்டைல் உரிமையாளருக்குச் சொந்தமானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், காரை ஓட்டி வந்த நபர் பின்னால் வந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிடுவதற்காக காரை வேகமாக இயக்கியுள்ளார். இதனால் நிலை தடுமாறிய கார் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி, ஒருவழிப்பாதையில் உள்ள சுவரில் மோதி நின்றது. விபத்தில் தூக்கி வீசப்பட்ட ரவிவர்மா மேம்பாலச் சுவர் மீது மோதி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: மதுபானம் உரிமம் விதி திருத்தம்: சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டதா? - விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாக காணப்படுவது வழக்கம். மேலும் பாண்டிபஜார் மற்றும் தி.நகர் போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்தச் சூழலில் அப்பகுதிகளில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. வாகன விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கத்தில் போக்குவரத்து காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் இதுபோன்ற விபத்துகள் நடப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு வாகனத்தின் பின்னால் மற்றொரு வாகனம் பயணிக்கும்போது குறிப்பிட்ட இடைவெளி விட்டு பயணிக்க வேண்டும், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு வழிவிடுதல் உள்ளிட்டவைகளை பொதுமக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் - மைசூர் சோதனைச் சாவடியில் வனத்துறையினர் ஓட்டுநரை மிரட்டியதால் பரபரப்பு!