சென்னை: மார்ச் 19ஆம் தேதி தமிழ்நாட்டின் சென்னை, வேலூர், திருப்பூர், திருவாரூர் ஆகிய பகுதிகள் உள்பட இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை (சிபிஐ) அதிரடி சோதனை நடத்தியது. இதில் 30 மோசடி வழக்குகளை சிபிஐ பதிவு செய்தது.
இந்த வழக்குகளில் ஹைதராபாத்தை அடிப்படையாகக் கொண்ட பிரபல கெய்த்தான்(khaitan) நிறுவனத்தின்மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. சீலிங் மின்விசிறி நிறுவனமான கைத்தான், தொழிலை மேம்படுத்துவதற்காக 2011ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கியுள்ளதாகவும், எஸ்பிஐ திருவாங்கூர் உள்ளிட்ட பல வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்து அந்நிறுவனம் கடன் பெற்றுள்ளதாகவு சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
அதுமட்டுமின்றி, வாங்கிய கடனை உரிய காரணத்துக்காக பயன்படுத்தாமல் தவறான முறையில் பயன்படுத்துவதாகவும் உள்ளிட்ட புகார்களுடன், இந்நிறுவனம் 266 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இந்தக் கடனை திருப்பி செலுத்தாத காரணத்தினால் எஸ்பிஐ துணை பொது மேலாளர் ஜி.வி சாஸ்திரி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது.
கெய்த்தான் நிறுவனம், அதன் நிர்வாக இயக்குநர் சுனில் கிருஷ்ணா கெய்த்தான் மற்றும் நிறுவனத்தின் இயக்குனர்கள் என 13 பேர் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.