சென்னை கெல்லிஸ் இந்தியன் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்துவருபவர் ரவீந்திரன் சாமுவேல். இவர், வாடிக்கையாளர் ஒருவர் பிணையமாக வைத்த பத்திரத்தை மீண்டும் கொடுக்க வேண்டுமென்றால் 7,500 ரூபாய் கையூட்டாகக் கேட்டுள்ளார். பின்னர் கடந்த மே 18ஆம் தேதி சிபிஐ பொறிவைத்து இவரைக் கைதுசெய்தது.
பின்னர் ரவீந்திரனை இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற உத்தரவுப்படி பூவிருந்தவல்லி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இரண்டு வாரங்களுக்கு எந்தப் பார்வையாளர்களும் இவரைச் சந்திக்க சிறை நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
ஆனால் ரவீந்திரனை சட்டவிரோதமாக கடந்த வெள்ளிக்கிழமையன்று 10.45 மணி முதல் 11.15 மணிவரை ஒரு நபர் சந்தித்துவிட்டுச் சென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அவர் பார்வையாளர்கள் பதிவேட்டில் பெயர், விலாசம் பதிவுசெய்யாமல் வந்து சென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் மின்சாரத் துறையில் பணி செய்யக்கூடிய அலுவலர் எனவும் தகவல் தெரியவந்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட சிறைக்குள் சட்டவிரோதமாகச் சென்று பார்வையாளரைச் சந்திக்க சிறைக் காவலாளி உதவி கண்டிப்பாக இருந்திருக்கும் எனக் கருதப்படுவதால் இது தொடர்பாகச் சிறைத் துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: பைக் திருடி ஓஎல்எக்ஸில் விற்று வந்த நபர் கைது!