சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு, முகப்பேரை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து, சொத்துக்களை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக சிபிசிஐடி காவல் துறையினர் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத்தில் பதுங்கல்
ஆனால், அவர்கள் அனைவரும் தலைமறைவாக இருப்பதால், தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோர் ஹைதராபாத்தில் பதுங்கி இருப்பதாக சிபிசிஐடிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ஹைதராபாத் செல்லும் தனிப்படை
இதனையடுத்து அவர்களை பிடிக்க ஹைதராபாத்துக்கு தனிப்படை அனுப்ப சிபிசிஐடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த 25ஆம் தேதி முகலிவாக்கத்தில் உள்ள முன்னாள் காவல் உதவி ஆணையர் சிவக்குமார் வீட்டில் வருவாய் துறை அலுவலர்களுடன் இணைந்து சிபிசிஐடி நடத்திய சோதனையில், 31 ஆவணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் - அதிமுக, பாஜக வெளிநடப்பு