சென்னை: பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட மாணவி சத்யஸ்ரீ வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குற்றவாளி சதீஷ், மாணவி சத்யஸ்ரீ இடம் ஏற்கெனவே தகராறு செய்ததாக பரங்கிமலை மற்றும் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளன.
இதில், மாம்பலம் காவல் நிலையத்தில் மட்டும் 75 என்கிற சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரங்கிமலை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. தற்போது மாம்பலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு குறித்து முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளன.
அதில், கடந்த மே மாதம் 23ஆம் தேதி சத்யஸ்ரீ படித்த தியாகராய நகர் கல்லூரியிலிருந்து வெளியே வந்தபோது சதீஷ், மாணவி சத்யஸ்ரீ இடம் வாய்த்தகராறு செய்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், மாணவி சத்யஸ்ரீயின் தாயார் ராமலட்சுமி, தனது மகளை சதீஷ் தாக்கியதாகப் புகார் கொடுத்திருந்தார். ஆனால், அந்தப்புகாரில் வாய்த்தகராறு செய்ததாக மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவியை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்திருந்தால் இந்திய தண்டனை சட்டத்தின்படி 324, 356 என்ற பல்வேறு சட்டப்பிரிவுகளை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், வெறும் வாய்த்தகராறு எனக்கூறி, இந்திய தண்டனைச் சட்டம் 75ன் படி வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏன் இந்த வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி - பாஜக ஆதரவாளர் ஃபாத்திமா அலி கைது!