சென்னை: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விஷச்சாராயம் குடித்த மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மரக்காணம் மற்றும் சித்தாமூர் காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் பதியப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே விஷச்சாராய இறப்புகளின் எதிரொலியாக, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்குப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு; கெமிக்கல் பேக்ட்ரி உரிமையாளர் கைது!
இந்த வழக்குத் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விஷச்சாராயம் விற்பனை செய்த வியாபாரி, மெத்தனால் வழங்கிய கெமிக்கல் கம்பெனி உரிமையாளர் இளைய நம்பி உட்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் கெமிக்கல் கம்பெனியின் உரிமையாளர் இளைய நம்பி கரோனா காலத்தில் நஷ்டம் அடைந்ததால் 1,200 லிட்டர் விஷசாராயத்தை 66,000 ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், இந்த வழக்கின் தீவிரத் தன்மையை அறிந்து முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க விஷச்சாராயம் தொடர்பான மூன்று வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். மேலும், விஷச்சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள 17 பேர் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது. கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில், விஷச்சாராய வழக்குகளுக்கு விசாரணை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான விஷச்சாராய வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி விசாரிக்கவும், செங்கல்பட்டு மாவட்ட விஷச்சாராய வழக்கை ஏடிஎஸ்பி மகேஸ்வரி விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விஷச்சாராய வழக்குகளின் கோப்புகளை போலீசாரிடமிருந்து பெற்று, சிபிசிஐடி போலீசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர். அடுத்த கட்டமாக சம்பவ இடத்திற்குச் சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட ஆளுநர் ஆர்.என். ரவி!
இதையும் படிங்க: "கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா?" - ஜெயக்குமார் கேள்வி!