சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பம் பகுதியில் உள்ள சுசில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அந்தப் பள்ளியை நடத்திவருகிறார்.
சிவசங்கர் பாபாவுக்கு எதிராக முன்னாள் மாணவிகள் சமூக வலைதளங்களில் அடுக்கடுக்காகப் பாலியல் புகார்களை முன்வைத்தனர். இது தொடர்பாக அவர் நேரில் முன்னிலையாகுமாறு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.
டெல்லிக்கு விரைந்த தனிப்படை
ஆனால், சிவசங்கர் பாபா முன்னிலையாகாமல் நெஞ்சுவலி காரணமாக உத்தரகாண்டில், டேராடூன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையிலிருந்து தப்பியோடியதாகவும் தகவல் வெளியானது.
இரவோடு இரவாக...
தொடர்ந்து, டேராடூன் சென்ற சிபிசிஐடி தனிப்படை காவல் துறை, நேற்று முன்தினம் (ஜூன் 16) சிவசங்கர் பாபாவைக் கைதுசெய்து, இரவோடு இரவாக சென்னைக்கு அழைத்துவந்தது.
அவரிடம் சென்னை சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாபாவின் சொகுசு அறை
தொடர்ந்து, கேளம்பாக்கத்தில் உள்ள அவரது பள்ளிக்கு சிபிசிஐடி காவல் துறை சிவசங்கர் பாபாவை அழைத்துச் சென்றது. அப்போது, சிபிசிஐடி காவல் துறைக்கு சிவசங்கர் பாபா Lounge எனக் கூறப்படும் அவரது பிரமாண்ட சொகுசு அறையைக் காட்டினார்.
அதில்தான், பல ஆண்டுகளாக மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகக் கூறுகின்றனர்.
ஊழியர்கள் மறைத்த ரகசியம்
ஆனால் சிபிசிஐடி காவல் துறை முதற்கட்டமாக பள்ளியில் அதிரடி சோதனை நடத்தியபோது பாபாவின் சொகுசு அறையைப் பள்ளி ஊழியர்கள் காட்டவில்லை.
இந்தச் சொகுசு அறைக்குப் பதிலாக வேறு ஒரு அறையை, பாபாவின் அறை என நிர்வாகிகள் காட்டியுள்ளனர். ஆனால் மாணவிகள் வாக்குமூலத்தில் கூறிய அறையும், ஊழியர்கள் காட்டிய அறையும் முரண்பாடாக இருந்த காரணத்தினால், சிவசங்கர் பாபாவையே பள்ளிக்கு வந்து அறையைக் காட்டச் சொன்னதாக சிபிசிஐடி காவல் துறை தெரிவித்துள்ளது.
பள்ளியின் வாசலில் வைக்கப்பட்டுள்ள மேப்பிலும் பாபா சொகுசு அறை எங்கு உள்ளது என்கிற தகவல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொய் குற்றச்சாட்டு
இதனையடுத்து சிவசங்கர் பாபா செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்போது எந்தக் குற்றத்திற்காக நீங்கள் கைதுசெய்யப்பட்டு உள்ளீர்கள் எனத் தெரியுமா என நீதிபதி கேட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்த சிவசங்கர் பாபா, கேகே நகர் பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட விவகாரத்தைச் சாதகமாக வைத்து, தன்னையும் அதே போன்று பொய்க் குற்றஞ்சாட்டி சிறையிலடைக்க இதுபோன்ற கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிக்கிய இமெயில் - போட்டோ
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து காவல் துறை தரப்பில் சில மின்னஞ்ல், புகைப்பட ஆதாரங்கள் நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது. அதனைப் பார்த்த நீதிபதி உடனடியாக சிவசங்கர் பாபாவை 15 நாள் ( ஜூலை 1 ஆம் தேதி வரை) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
தனியாரிலிருந்து அரசு மருத்துவமனைக்கு ஜம்ப்: விடாத நீதிபதி
அப்போது தனக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளதாகவும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என சிவசங்கர் பாபா தரப்பில் கோரிக்கைவைக்கப்பட்டது.
அதற்கான செலவை தானே பார்த்துக் கொள்வதாகவும் சிவசங்கர் பாபா தெரிவித்துள்ளார். அதற்கு நீதிபதி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இறுதியாக, அரசு மருத்துவமனையிலாவது சிகிச்சை பெற்றுக்கொள்கிறேன் எனக் கேட்டதாகவும், ஆனால் அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்து சிவசங்கர் பாபாவை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
சிவசங்கர் பாபா மீது புகார் கொடுக்க வேண்டுமா?
சிவசங்கர் பாபா மீது புகார் கொடுக்க வேண்டுமென்றால் inspocu2@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு சிபிசிஐடி காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் - அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரடி!