தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியான ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்பி ஒருவர் புகாரளித்தார். இதனையடுத்து புகார் மீது நடவடிக்கை எடுக்க கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் அடங்கிய விசாகா கமிட்டியை தமிழ்நாடு அரசு அமைத்தது.
அதோடு மட்டுமல்லாமல் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கட்டாய காத்திருப்போர் பட்டியலில் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்த தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு இருந்தார். சிபிசிஐடி காவல்துறை பெண் எஸ்பி கொடுத்த புகாரின்பேரில்
- மானபங்கப்படுத்துதல் [354a]
- சட்டவிரோதமாகத் தடுத்த நிறுத்தல் [341]
- கொலை மிரட்டல் [506(1)]
- பெண் வன்கொடுமைச் சட்டம் [4]
ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை புகார் கொடுக்கவிடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் மீதும் மேற்கண்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் வழக்கை தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க உள்ளார். இன்று மதியம் 2.30 மணியளவில் இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
இதனிடையே, ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணை அலுவலராக விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார்.