சென்னை: தமிழ்நாட்டின் புதிய சரணாலயமாக கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள 'காவேரி தெற்கு வன உயிரின சரணாலயம்' தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''08.11.2022அன்று தமிழ்நாடு அரசு கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் உள்ள 686.405 சதுர கி.மீ., பரப்பிலான காப்புக்காடுகளை காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமாக வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972, பிரிவு 26A-ன்கீழ் அறிவிக்கிறது.
இந்த அரசு, கடந்த ஓராண்டில், கழுவேலி பறவைகள் சரணாலயம் (விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள்), நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் (திருப்பூர் மாவட்டம்), கடவூர் தேவாங்கு சரணாலயம் (கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள்) மற்றும் கடற்பசு பாதுகாப்பகம் (தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்) போன்றவற்றை வன உயிரின பாதுகாப்புச்சட்டம், 1972-ன்கீழ் பாதுகாக்கப்பட்ட இடங்களாக அறிவித்துள்ளது.
இச்சரணாலயமானது தமிழ்நாட்டின் காவிரி வடக்கு வனஉயிரின சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் பெரியதொரு பாதுகாப்புப் பகுதியாக அமைகிறது. இப்பகுதி சூழலியல் பாதுகாப்பு மற்றும் தாவர இனங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடப்பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முக்கியப் பகுதியாக உள்ளது.
இப்பகுதியானது தென்னிந்தியாவில் யானைகள் வாழ்விடங்களில் முக்கியமானதாகவும் காவிரி ஆற்றுப்படுகையில் வன உயிரினங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாகவும் அமைகிறது. இந்த சரணாலயப்பகுதி நீலகிரி உயிர் கோளக் காப்பகப் பகுதி வரை, தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வன உயிரின வாழ்விடத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சரணாலயத்தின் தொடர்ச்சியாக உள்ள சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம், காவிரி வனஉயிரின சரணாயலம், மலை மாதேஸ்வரா வன உயிரின சரணாலயம் போன்ற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கணக்கெடுப்புகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இப்பாதுகாக்கப்பட்ட பகுதிகள் தொடர்ச்சியாக உள்ளதால், இப்பகுதியில் மீண்டும் புலிகள் எண்ணிக்கையை மீட்டெடுக்க ஏதுவாக அமையும். மேலும், சிறுத்தைகள் மற்றும் அழியும் நிலையில் உள்ள மாமிச உண்ணிகளின் வாழ்விடத்தை மேம்படுத்தவும் ஏதுவாக அமையும்.
அறிவிக்கை செய்யப்பட்ட இச்சரணாலயம் இரு முக்கிய யானைகள் வழித்தடமான நந்திமங்கலம் - உழிபண்டா மற்றும் கோவைபள்ளம் - ஆனபெத்தள்ளா ஆகிய இடங்களைக்கொண்டுள்ளது. இப்புதிய சரணாலயம் 35 வகையான பாலூட்டிகள், 238 வகையான பறவைகள் மற்றும் 103-க்கும் மேற்பட்ட மரவகைகளை கொண்ட உயிர்பன்மை மிக்கப்பகுதியாக காணப்படுகிறது.
காவிரி ஆற்றுப்படுகையான இங்கு டெக்கான் மஹனீர் மீன்கள், ஹம்ப்பேக்டு மஹனீர் மீன்கள், மெல்லிய ஓடுடைய ஆமைகள், மலை அணில்கள், நீர்நாய்கள், முதலைகள், நாற்கொம்பு மான்கள் போன்ற அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள் இங்கு காணப்படுகின்றன.
இப்பகுதியானது 50 கி.மீ. தொலைவிற்கு காவிரி ஆற்றுப்படுகையில் ஒரு தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டு, மேட்டூர் அணை வரை தாழ்வான காப்புக்காடுகளை உள்ளடக்கியது. இப்பகுதியினை சரணாலயமாக அறிவிப்பதன் மூலம், வன உயிரினங்களின் வாழ்விடம் மீட்டெடுக்கப்படும். இதன் மூலம் காவிரி ஆற்றுப் படுகையின் மண் வளம் மற்றும் நீர் வளம் பாதுகாக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போட்டிக்கு தயாராகும் ஓபிஎஸ்.. ஈபிஎஸ் அணியின் அடுத்த பிளான்?