சென்னை: சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் மீது செய்யூர் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு பேசினார்
“ஓராண்டை நிறைவு செய்யும் திராவிட மாடல் ஆட்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனதார வரவேற்கிறது. விசிக தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்த 12 மணி நேரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்த முதலமைச்சருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைத்து அதனை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள சாதிப்பெயர் அடையாளங்களை நீக்கிட அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியின் பெயரை “சமூக நலப்பள்ளி” என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கும் விடுதிகளை மிகச்சிறந்த கட்டமைப்பு கொண்டதாக மாற்ற வேண்டும், மாணாக்கருக்கு உணவுக்கு என ஒதுக்கப்படும் மாதம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் என்று இருப்பதை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
நீதித்துறையில் பட்டியல் வகுப்பினருக்கு பழங்குடி இனத்தவருக்கு உரிய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வழிவகை காண வேண்டும், அரசு வழக்கறிஞர் பணி நியமனங்களில் போதுமான பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு ஆதி திராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கிட வேண்டும்.
மேலும் கிறிஸ்தவம் தழுவும் ஆதிதிராவிட மக்கள் ஒன்றிய அரசின் அரசாணை மூலம் இட ஒதுக்கீடு உரிமையை பறிகொடுத்து தவிக்கின்றனர். அம்மக்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு ஒன்றிய அரசு செவிமடுக்கவில்லை. கிறிஸ்தவம் தழுவினாலும் அதே இட ஒதுக்கீட்டை பெற்றிட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.
சாதியால் அடையாளப்படுத்துவதை பெருமையாக கருதும் சமூக கட்டமைப்பில் சாதிய அடையாளத்தை அவமானமாக கருதும் தன்மை கொண்டவர்கள் பட்டியல் வகுப்பினர். எனவே அவர்களது குடியிருப்பை காலனி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சான்றோர் குடியிருப்பு அல்லது தொல்தமிழர் குடியிருப்பு என குறிப்பிட வேண்டும். மேலும் தாழ்த்தப்பட்டோர் என்ற சொல்லுக்கு பதிலாக பட்டியல் வகுப்பார் என்ற சொல்லையே அரசு பயன்படுத்த வேண்டும்” என பேசினார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மற்றும் எம்எல்ஏக்களுக்கு தனியாக விளையாட்டு மைதானம் கேட்ட ஓபிஎஸ்