த.செ.ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டெர்டெயின்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய் பீம்'. இதில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' வெளியாகியுள்ளது.
ஜெய்பீம் படத்திற்கு எதிராகப் புகார்
இந்நிலையில் 'ஜெய் பீம்' படத்தில் குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களைத் திருடன் என்று அடையாளப்படுத்தியதால், படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என வீரத் தமிழர் விடுதலை சங்கத்தின் மாநிலத் தலைவர் வெற்றி செல்வம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "ஜெய் பீம் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அந்தத் திரைப்படத்தில் தான் சார்ந்த குறவர் சமுதாய மக்களைத் திருடர்கள் என அடையாளப்படுத்திக் காட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அந்தத் திரைப்படத்தில் இருளர் சமுதாய மக்கள் அனுபவித்து வருவதாகக் காட்டப்பட்ட சித்திரவதைகள் அனைத்தும் உண்மையில் தங்கள் குறவர் சமுதாய மக்களே இன்று வரை அனுபவித்து வருகின்றனர்.
'ராஜா கண்ணு' இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் அல்ல
மேலும், அத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரமான 'ராஜா கண்ணு' உண்மையில் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் இல்லை. அவர் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். 'ஜெய் பீம்' படத்தைப் பார்த்த முதலமைச்சர் உட்பட பொதுமக்கள் அனைவரும் இருளர் சமுதாய மக்கள் மீது பரிதாப அலைகளை வீசி உதவிகள் செய்து வருகிறார்கள்.
ஆனால், இன்று வரை உண்மையில் பாதிக்கப்பட்டு வருவது எங்கள் குறவர் சமுதாய மக்கள் தான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், நிவாரண உதவிகளுக்காக இதை நாங்கள் கூறவில்லை.
எங்கள் சமுதாய மக்களின் துன்பங்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்துடனே இதை வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல் எங்கள் சமுதாய மக்களைத் திருடன் எனக் காட்சிப்படுத்தியும், உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பரப்பியும் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும். இதுகுறித்து முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்குப் புகார் அளித்து இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அஜித், ரஜினியைத் தொடர்ந்து 'சிறுத்தை' சிவா படத்தில் யார்?