சமூக செயற்பாட்டாளர் முகிலனை நாளைக்குள் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி ரவி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, முகிலன் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், " ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு கரூர் நீதிமன்றத்தில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் கைது செய்யப்பட்டதால் தமிழ்நாடு காவல்துறையினரிடம் முகிலன் ஒப்படைக்கப்பட்டு அதன் மூலம் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
அவர் மீது எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லை. எந்த குற்றத்திற்கான அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் அவர் மீது பொய்யாக பாலியல் வழக்கு 417, 316 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீதிபதி எந்த விளக்கமும் அவரிடம் வாங்கவில்லை. எங்கள் தரப்பில் இரவு பயணம் வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.