கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் சிறைக் கைதிகளை ஜாமீனில் விடுதலை செய்வது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் வைகை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அதில், சிறைகளில் ஆறு வயதுக்குக் கீழான குழந்தைகளுடன் உள்ள பெண் கைதிகளின் நலனைக்கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். மேலும் சிறைகளில் காலியாக உள்ள மருத்துவர், தூய்மைப் பணியாளர்கள் காலிப்பணியிடங்களைப் போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளும், இவ்விரு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களும் அறிக்கை தாக்கல் செய்தன.
தமிழ்நாடு அரசு சார்பாக தாக்கல் செய்த அறிக்கையில், முன்பே சில கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளுடன் உள்ள நான்கு தண்டனைக் கைதிகள் உள்ளிட்ட ஏழு பெண் கைதிகள், தற்போது சிறையில் உள்ளதாகவும், அவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதுச்சேரி அறிக்கையில், இங்குள்ள மத்திய சிறையில் 156 கைதிகளில் 77 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று குணமடைந்து மீண்டும் சிறைக்கு வந்துவிட்டதாகவும், 31 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மூத்த வழக்கறிஞர் வைகை வாதிட்ட போது, கைதிகள் விடுதலைத் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள உயர் மட்டக்குழு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட வேண்டுமெனவும், புழல் சிறையில் அமைக்கப்பட்டது போல அனைத்து சிறைகளிலும் கரோனா சிகிச்சை மையங்களை அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாட்டில் சிறைகளில் உள்ள ஏழு பெண் கைதிகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், கைதிகள் விடுதலை குறித்து உயர் மட்டக்குழு எடுக்கும் முடிவுகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும் கைதிகள் அவர்கள் உறவினர்களுடன் பேச வீடியோ கால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 7ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: முதல் டோஸ் கோவிஷீல்டு, 2ஆம் டோஸ் கோவேக்ஸின்; உ.பி-இல் நேர்ந்த குளறுபடி!